ருதுராஜின் தீப்பொறி ஆட்டம் வீண்: சிஎஸ்கேவை வீழ்த்திய கில், ரஷித் கான்!

ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டம் எப்படி இருக்க வேண்டும்? பேட்டிங் மாஸ்டர் கிளாஸ், தரமான வேகப்பந்து வீச்சு, புதிரான சுழற்பந்து வீச்சு, நம்பமுடியாத காட்ச், எதிர்பாராத திருப்பம், கடைசி ஓவர் திரில்லர்..கம்ப்யூட்டரில் புரொகிராம் செய்யப்பட்டது போல அப்படியே நடந்து முடிந்திருக்கிறது சிஎஸ்கே குஜராத் டைட்டன்ஸ் இடையிலான முதல் ஆட்டம்.

போட்டிக்குள் ஒரு போட்டி என்பது எல்லா ஆட்டங்களுக்கும் அமைந்து விடாது. மகேந்திர சிங் தோனி Vs ஹார்திக் பாண்டியா: குருவை விஞ்சுவாரா சிஷ்யன் என்பதுதான் இந்தப் போட்டிக்கான யூஎஸ்பி! இதுவொரு பக்கம் என்றால் ‘இம்பாக்ட் பிளேயர்’ ரூலை இரு அணிகளும் எப்படி பயன்படுத்தப் போகின்றன என்பதும் ஒரு பேசுபொருளாக மாறியது.

டாஸ் போடும் வைபவத்தில் யார் பேட்டிங் பௌலிங் என்வதை விட கேப்டன்கள் கையில் இருக்கும் ‘டீம் ஷீட்கள்’ மீது எல்லா காமெராக்களும் கண் வைத்தன. எதற்கும் அலட்டிக் கொள்ளாத ஸ்டீபன் பிளமிங், சதா எந்நேரமும் சிந்தித்துக் கொண்டி ஆடுகளத்தை வலம் வரும் ஆஷிஸ் நெஹ்ரா என வழக்கமான சில டெம்ப்ளேட்களுக்கும் இந்த ஆட்டத்தில் பஞ்சம் இல்லை.

டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பௌலிங்கை தேர்வு செய்தது. ஷமி இடது கை பேட்டர்களுக்கு எதிராக நன்றாக வீசினார். ரவுண்ட் த விக்கெட் கோணத்தில் ஆரம்பத்தில் இருந்தே இடதுகை பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுத்தார். கான்வே ஷமியின் ஸீம் அப் பந்துகளுக்கு பதில் இல்லாமல் தட்டுத் தடுமாறினார். பௌண்டரியில் சாகஸம் செய்த வில்லியம்சன் காயம் அடைந்தார். எஞ்சியுள்ள தொடரில் விளையாடுவாரா?

ருதுராஜ் கெய்க்வாட் தனது டிரேட் மார்க் ஆட்டத்தை ஆடினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜோஷுவா லிட்டில் ஐபிஎல் கிரிக்கெட்டின் முதல் ஓவரிலேயே மோசமான அனுபவத்தை சந்தித்தார்: மூன்று பௌண்டரிகள். ரஷீத் கானை இறங்கிவந்து தைரியமாக ஆடிய மொயீன் அலி கடைசியில் அவருடைய பந்திலேயெ வீழ்ந்தார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டோக்ஸ், சஹாவின் அற்புதமான காட்ச் காரணமாக நடையைக் கடினார். ருதுராஜின் பேட்டிங்கைப் பார்த்த போது சிஎஸ்கே 200 ரன்களைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அம்பதி ராயுடுவும் ஷிவம் துபேவும் சொதப்பவே, ஆட்டம் குஜராத்தின் கைகளுக்கு சென்றது. சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ருதுராஜும் 92 ரன்களில் ஆட்டம் இழந்தார். கடைசிக் கட்டத்தில் ‘தல’ தோனியின் வான வேடிக்கை மஞ்சள் ஆர்மியை மகிழ்ச்சியில் திளைக்கச் செய்தது.

179 ரன்களை இலக்காக வைத்துக் களமிறங்கிய குஜராத்துக்கு கில் – சஹா கூட்டணி நல்ல துவக்கத்தை கொடுத்தது. சஹா, தனது வழக்கமான ‘கலுவிதாரன’ பாணி ஆட்டத்தில் இரண்டு சிக்ஸர்கள், இரண்டு பௌண்டரிகளை அடித்துவிட்டு ஆட்டம் இழந்தார். ஷுப்மன் கில் தனது ஃபார்ம் என்னவென்று காட்டினார். என்ன ஒரு டைமிங்!

தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சனும் விஜய் சங்கரும் அணிக்குப் பங்களித்தார்கள். குஜராத் எளிதாக வெற்றி பெற்றுவிடும் என்று எல்லாரும் நினைத்த போது தோனி வேறு ஒன்றை நினைத்தார். இளம் வேகப்பந்து வீச்சாளர் ஹங்கர்கேகரிடம் பந்தைக் கொடுத்தார்.

சாய் சுதர்சன், விஜய் சங்கர் விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்துக்கு உயிர் கொடுத்தார் ஹங்கர்கேகர். ஆனால் ஆல் ரவுண்டர்கள் ராகுல் தெவாதியா, ரஷித் கான் ஆகியோரின் அதிரடியில் குஜராத் டைட்டன்ஸ் ஆட்டத்தைத் தன்வசப்படுத்தியது. சிக்கமான வீசியதோடு முக்கிய விக்கெட்டுகளையும் பேட்டிங்கில் 333.33 ஸ்ட்ரைக் ரேட்டில் 10 ரன்கள் குவித்த ரஷித் கான் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

கேன் வில்லியம்சன் பேட்டிங் செய்யாமல், டேவிட் மில்லர் அணியில் இல்லாமல் 180+ இலக்கை எட்டியுள்ளது குஜராத் அணி. ஐபிஎல் போட்டியில் அந்த அணி இலக்கை விரட்டிய 10 ஆட்டங்களில் 9-ல் வெற்றி பெற்றுள்ளது. அந்த 9-ல் 8 வெற்றிகள் கடைசி ஓவரில் கிடைத்துள்ளன. 4 ஆட்டங்களில் ராகுல் தெவாதியா வெற்றிக்கான ரன்களை எடுத்துள்ளார். என்ன, இதெல்லாமும் கம்ப்யூட்டரில் புரோகிராம் செய்யப்பட்டது போல மாறிக்கொண்டிருக்கிறதா?

Source: ESPN Crickinfo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *