பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 257 ரன்கள் குவித்தது. ஐபிஎல் வரலாற்றிலேயே அதிகபட்ச ரன்கள் என்ற சாதனையை வெறும் 6 ரன்களில் தவறவிட்டது. 2013-ல் புனே வாரியர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்ததே இதுவரை சாதனையாக உள்ளது.
257 ரன்கள் எடுத்ததன் மூலம் லக்னெள அணி நிகழ்த்திய சாதனைகள்:
* லக்னௌ மொத்தம் 41 பவுண்டரிகள் அடித்தது. ஐபிஎல் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக பவுண்டரிகள் அடித்த சாதனையில் லக்னௌவுக்கு 2-வது இடம். இந்தச் சாதனையையும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரே வைத்துள்ளது. 263 ரன்கள் குவித்த ஆட்டத்தில் 21 சிக்ஸர்கள், 21 ஃபோர்கள் என மொத்தம் 42 பவுண்டரிகளை விளாசியது பெங்களூர்.
* 27 ஃபோர்கள் அடித்த லக்னௌ, அதிக ஃபோர்கள் அடித்த சாதனையில் 3-வது இடத்தில் உள்ளது.
* 15.5 ஓவர்களில் லக்னௌ 200 ரன்களை அடித்தது.
200 ரன்களை அதிவேகமாக அடித்த சாதனையிலும் ஆர்சிபியே முதலிடத்தில் உள்ளது. ஆனால், இது 263 ரன்கள் அடித்த ஆட்டம் கிடையாது. 2016-ல் கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு எதிரான 15 ஓவர்கள் ஆட்டத்தில் 14.1 ஓவர்களில் 200 ரன்களை அடித்தது ஆர்சிபி.
263 ரன்கள் அடித்த ஆட்டத்தில் ஆர்சிபி 15.5 ஓவர்களில் 200 ரன்களை அடித்தது. பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் லக்னௌவும் 15.5 ஓவர்களில் 200 ரன்களை அடித்தது. அதிவேகமாக 200 ரன்கள் அடித்த சாதனையில் ஆர்சிபி மற்றும் லக்னௌ அணிகள் 2-வது இடத்தைப் பகிர்ந்துள்ளன.
* இந்த ஆட்டத்தில் லக்னௌ பேட்டர் கைல் மேயர்ஸ் 54 ரன்கள் அடித்தார். இதன்மூலம், நடப்பு ஐபிஎல் பருவத்தில் பவர்பிளேவுக்குள் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் அடித்த பேட்டர்களில் ஜாஸ் பட்லருடன் இணைந்து முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டார். இதுவரை 4 முறை பவர்பிளேவுக்குள் அரை சதம் அடிக்கப்பட்டுள்ளன. இதில் 2 அரை சதங்கள் மேயர்ஸ் அடித்தவை.
* பஞ்சாப் கிங்ஸ் வேகப்பந்து வீச்சாளர்கள் 14 ஓவர்களில் 186 ரன்கள் கொடுத்தார்கள். எகானமி 13.28. ஒரு ஐபிஎல் இன்னிங்ஸில் வேகப்பந்து வீச்சாளர்களின் மோசமான எகானமி இதுவே (குறைந்தபட்சம் 75 பந்துகள்). இதற்கு முன்பு இந்த மோசமான சாதனையை ராஜஸ்தான் ராயல்ஸ் வைத்திருந்தது. 2014-ல் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் வேகப்பந்துவீச்சாளர்களின் எகானமி 13.18 ஆக இருந்தது.
* 257 ரன்கள் அடித்த ஆட்டத்தில் இரு ஓவர்களில் லக்னௌ ஒரு பவுண்டரியும் அடிக்கவில்லை. அறிமுகப் பந்துவீச்சாளர் குர்னூர் பிரார் வீசிய முதல் ஓவரில் கேஎல் ராகுல் தொடர்ச்சியாக 4 பந்துகளில் ரன் ஏதும் எடுக்கவில்லை. இந்த ஓவரில் 2 ரன்கள் மட்டுமே அடித்தது லக்னௌ. ராகுல் சஹார் வீசிய 9-வது ஓவரில் 4 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டன.
* பவர்பிளேயில் 74 ரன்கள் குவித்த லக்னௌவின் ரன்ரேட் 12.33. நேற்றைய ஆட்டத்தை மூன்று கட்டங்களாகப் பிரித்தால், இதுவே குறைவான ரன்ரேட். நடுஓவர்களில் 126 ரன்கள் விளாசிய லக்னௌவின் ரன்ரேட் 12.6. கடைசி நான்கு ஓவர்களில் 57 ரன்கள் அடித்ததால், ரன்ரேட் 14.25.
* நடப்பு ஐபிஎல் பருவத்தில் 200-க்கும் மேற்பட்ட ரன்கள் 20 முறை அடிக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் வரலாற்றில் இது புதிய சாதனை. இதில் 13 முறை முதலில் பேட்டிங் செய்த அணிகள் அடித்தவை. முந்தைய பருவத்தில் 18 முறை 200 ரன்கள் அடிக்கப்பட்டன. அப்போதும் 13 முறை 200 ரன்கள் அடிக்கப்பட்டது முதல் பேட்டிங்கில்தான்.
Source: ESPN Crickinfo