மும்பை இந்தியன்ஸ் உடன் பலப்பரீட்சை நடத்தும் சிஎஸ்கே; ருதுராஜின் அதிரடியை சமாளிக்குமா மும்பை?

ஐபிஎல் போட்டியின் இரண்டு வெற்றிகரமான அணிகள் இன்று, வான்கடே மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் ரசிகர்களால் ‘El Clasico’ என்று வர்ணிக்கப்படுகிறது. ஆனால் ஐபிஎல் 2023-ல் இரு அணிகளுமே இன்னும் தங்களுடைய முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

மும்பையை வதைக்கும் காயம்

முதல் ஆட்டத்தில் குஜராத்திடம் தோல்வியடைந்த சிஎஸ்கே, சேப்பாக்கம் மைதானத்தில் லக்னௌ அணியை தனது வழக்கமான சுழல் ஆயுதத்தைக் கொண்டு வீழ்த்தியது. நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இல்லாதது மும்பை அணிக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஆஸ்திரேலியாவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஜை ரிச்சர்ட்சனும் காயம் காரணமாக விலகியிருப்பது அந்த அணியை மேலும் பலவீனப்படுத்தி உள்ளது.

ஃபார்முக்கு வருவாரா சூர்யகுமார்?

வேகப்பந்து வீச்சில் மும்பை அணி இப்போதைக்கு ஜோஃப்ரா ஆர்ச்சரை மட்டுமே மலைபோல நம்பியிருக்கிறது. ரோஹித், சூர்யகுமார், கிசான் போன்ற இந்திய பேட்டர்கள் ஃபார்ம் இல்லாமல் தவிப்பதும் அணி நிர்வாகத்துக்கு தலைவலியை ஏற்படுத்திவருகிறது. அதிரடி பேட்டர் டிம் டேவிடும் முந்தைய ஆட்டத்தில் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் விளையாடவில்லை. திலக் வர்மா, நேஹல் வதேரா போன்ற இளம் பேட்டர்களை மட்டுமே நம்பிக்கை அளிக்கின்றனர்.

சிஎஸ்கேவின் பலவீனம்

மும்பைக்கு பேட்டிங்கில் பிரச்சினை என்றாலு சிஎஸ்கேவுக்கு வேகப்பந்து வீச்சில் பிரச்சினை. முதல் இரு ஆட்டங்களில் அந்த அணி இறுதிக்கட்ட ஓவர்களில் ரன்களை வாரி இறைத்தது. திறமையான ஆட்டக்காரர்கள் என்றாலும் துஷார் தேஷ்பாண்டே,ஹங்கர்கேகர் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் அனுபவம் குறைந்தவர்கள். காயத்தில் இருந்து மீண்டுவந்த தீபக் சஹாரின் ஸ்விங் பந்துவீச்சும் சொல்லிக் கொள்ளும்படி இதுவரை அமையவில்லை.

மகாலா உள்ளே; சாண்ட்னர் வெளியே?

தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் சிசன்டா மகாலாவின் வருகை சிஎஸ்கே அணியின் நம்பிக்கையை நிச்சயம் அதிகரித்திருக்கும். இறுதிக்கட்ட ஓவர்களில் கட்டுக்கோப்பாக வீசுவதற்கு பெயர்போனவர் மகாலா. வான்கடே மைதானத்தில் சுழற்பந்து வீச்சு பெரிதாக எடுபடாது. ஆகவே, மிட்ச்செல் சாண்ட்னருக்குப் பதிலாக மகாலாவை அணியின் சேர்ப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

ஃபார்மில் கேப்டன் தோனி!

வான்கடே மைதானத்தில் துவக்க ஓவர்களில் ஸ்விங் பந்துவீச்சுக்கு ஒத்துழைப்பு கிடைக்கும். இதன் காரணமாக ஜேசன் பெஹ்ரண்டார்ஃபை மும்பை இந்தியன்ஸ் அணி தேர்வு செய்வதற்கு வாய்ப்புள்ளது. இடக்கை வேகப்பந்து வீச்சாளரான பெஹ்ரண்டார்ஃப் பவர்பிளேவில் திறமையாக பந்துவீசக் கூடியவர். சிஎஸ்கே கேப்டன் தோனி நல்ல ஃபார்மில் இருப்பது ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் சிஎஸ்கே நிர்வாகத்துக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ருதுராஜின் ருத்ரதாண்டவர்!

சிஎஸ்ஏ அணியின் 11வது ஆட்டக்காரர் தீபக் சஹார். அணி முழுக்க ஆல்ரவுண்டர்களால் நிரம்பி வழிகிறது. ஆனால் பென் ஸ்டோக்ஸ், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா போன்ற பேட்டர்கள் எதிர்பார்த்த அளவுக்கு ரன் சேர்க்கவில்லை. கடந்த ஆட்டத்தில் பந்துவீசிய ஸ்டோக்ஸ் இந்த ஆட்டத்திலும் வீசுவாரா என்பது தெரியவில்லை. ருதுராஜ் – கான்வே துவக்க ஜோடி பிரமாதமான ஃபார்மில் இருக்கிறது.

களமிறங்குவாரா சைனாமேன்?

மும்பை அணியில் அனுபவமிக்க சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா இருக்கிறார். இந்த நிலையில் சைனாமேன் பவுலர் குமார் கார்த்திகேயா இன்றைய ஆட்டத்தில் களமிறக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தோனி கடந்த ஆட்டத்தில் வெற்றிபெற்ற அணியுடன் களமிறங்குவாரா இல்லை சுழலர் ஒருவரை நீக்கிவிட்டு மகாலாவை அணியில் சேர்ப்பாரா என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம்!

வாய்ப்புள்ள அணி:

சிஎஸ்கே: டெவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி, பென் ஸ்டோக்ஸ், ஷிவம் துபே, அம்பதி ராயுடு, ரவீந்திர கடேஜா, எம்.எஸ். தோனி ( கேப், விக்), சிசண்டா மகாலா, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், தீபக் சஹார்.

எம்ஐ: ரோஹித் சர்மா, இஷான் கிஷன் (விக்.), சூர்யகுமார் யாதவ், கேமரூன் கிரீன், திலக் வர்மா, நேஹல் வதேரா, டிம் டீவிட், ஹிருத்திக் ஷோகீன், ஜேசன் பெஹ்ரெண்டார்ஃப், அர்ஷத் கான், குமார் கார்த்திகேயா, ஜோஃப்ரா ஆர்ச்சர்.

சிஎஸ்கே அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தால் தேஷ்பாண்டே அணியில் இடம்பெறுவார்; இரண்டாவது இன்னிங்ஸில் அவருக்குப் பதிலாக அம்பதி ராயுடு இம்பாக்ட் பிளேயராக விளையாடுவதற்கு வாய்ப்பு உள்ளது. மும்பை அணி முதலில் பந்துவீசும் பட்சத்தில் ஜேசன் பெஹ்ரெண்டார்ஃப் அணியில் இடம்பிடிப்பார். இரண்டாவது இன்னிங்ஸில் அவருக்குப் பதிலாக சூர்ய குமார் யாதவ் இம்பாக்ட் பிளேயராக களமிறங்க வாய்ப்புள்ளது.

வியூகம் என்ன?

மும்பை இந்தியன்ஸ் சுழற்பந்து வீச்சாளர் பியூஸ் சாவ்லா சென்னையின் அம்பதி ராயுடுவுக்கு எதிராக துருப்புச் சீட்டாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை விளையாடிய 12 ஆட்டங்களில் 6 முறை ராயுடுவின் விக்கெட்டை அவர் கைப்பற்றியுள்ளார்.

இடக்கை சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சூர்யகுமார் யாதவ் 20 ஓவர் ஆட்டங்களில் பெரியளவில் ரன் குவிக்கவில்லை. இதன் காரணமாக ஜடேஜா, சாண்ட்னர் ஆகியோர் சூர்யகுமாருக்கு இந்த ஆட்டத்தில் நெருக்கடி கொடுக்க வாய்ப்புள்ளது.

தோனி 15வது ஓவருக்கு முன்பாக களம் காணும்பட்சத்தில் அவருக்கு மும்பையின் சுழற்பந்து வீச்சாளர்கள் சிம்ம சொப்பனமாக மாறலாம். 2019-இல் இருந்து சுழற்பந்து வீச்சுக்கு எதிராக தோனியின் ஸ்ட்ரைக் ரேட் 91.9 மட்டுமே

Source: ESPN Crickinfo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *