மும்பை இந்தியன்ஸ் அணியில் மீண்டும் மெரிடித்!

மும்பை இந்தியன்ஸ் அணி காயம் காரணமாக விலகிய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜை ரிச்சர்சனுக்கு மாற்று ஆட்டக்காரராக மற்றொரு ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ரைலி மெரிடித்தை ஒப்பந்தம் செய்துள்ளது.

கடந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய மெரிடித், மொத்தம் எட்டு ஆட்டங்களில் எட்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஐபிஎல் 2023 ஏலத்துக்கு முன்பாக அணியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

சமீபத்தில் நடந்து முடிந்த பிபிஎல் போட்டியில் 14 ஆட்டங்களில் விளையாடிய மெரிடித், 21 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதுவரை ஐந்து சர்வதேச ஆட்டங்கள் உள்பட 77 இருபது ஓவர் ஆட்டங்களில் களமிறங்கியுள்ள அவர் ஒட்டுமொத்தமாக 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

ஜை ரிச்சர்சன் காயம் அடைந்ததை அடுத்து இலங்கை வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்தா சமீரா உடன் மும்பை இந்தியனஸ் அணி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அது தோல்வியில் முடியவே, தற்போது ரைலி மெரிடித் மாற்று ஆட்டக்காரராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல, ஆர்சிபி அணி தோள்பட்டை காயம் காரணமாக விலகிய ரீஸ் டாப்லிக்கு மாற்று ஆட்டக்காரராக தென்னாப்பிரிக்காவின் வெய்ன் பார்னலை ஒப்பந்தம் செய்துள்ளது. இடக்கை வேகப்பந்து வீச்சாளரான வெய்ன் பார்னல் கடைசியாக 2014-ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடினார்.

புனே வாரியர்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ள அவர் 26 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். மேலும் அதிரடி பேட்டர் ரஜத் படிதாருக்கு மாற்று ஆட்டக்காரராக கர்நாடகத்தை சேர்ந்த மிதவேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் விஜயகுமார் வைஷாக் அறிவிக்கப்பட்டுள்ளார்.

Source: ESPN Crickinfo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *