சிஎஸ்கேவின் மறுவருகை! ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி அடைந்தது என்னவோ உண்மைதான். ஆனால் அஹமதாபாதில் ஆர்ப்பரித்த மஞ்சள் ஆர்மியைப் பார்த்தபோது அது தோல்வியாகவே தெரியவில்லை. மகேந்திர சிங் தோனி மீதான தங்களுடைய அன்பை வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பாகவே அந்த ஆட்டத்தை சிஎஸ்கே ரசிகர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள். மொதேரே மைதானத்திலே இப்படி என்றால் சென்னை சேப்பாக்கத்தில் ரசிகர்களின் ஆர்ப்பரிப்பு எப்படி இருக்கும்? சேப்பாக்கத்தில் தங்களுடைய தலைவனின் மறுவருகைக்காக நான்கு ஆண்டுகளாக தவம் கிடக்கிறார்கள் சிஎஸ்கே ரசிகர்கள்.
சுழலோ சுழல்!
சேப்பாக்கம் என்றவுடன் தோனிக்கு அடுத்ததாக நினைவுக்கு வருவது சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம். 2008-ல் இருந்தே சுழற்பந்து வீச்சைப் பிரதானப்படுத்திய ஒரு அணியையே சிஎஸ்கே தேர்வு செய்துவருகிறது. லக்னௌ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்திலும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை எதிர்பார்க்கலாம். ரவீந்திர ஜடேஜா, மிட்ச்செல் சாண்ட்னர், மொயீன் அலி என தரமான சுழலர்கள் சிஎஸ்கேவில் உள்ளனர். முதல் ஆட்டத்தை வெற்றியுடன் தொடங்கிய கே.எல். ராகுல் தலைமையிலான லக்னௌ அணியில் மாற்றம் எதுவும் இருக்காது என்று தெரிகிறது.
மிரட்டும் மார்க் வுட்
கடந்த ஆட்டத்தில் ரன்களை வாரி இறைத்த உனட்கட்டுக்குப் பதிலாக அமித் மிஸ்ரவை உள்ளே கொண்டு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. விக்கெட் கீப்பர்-பேட்டர் குயிண்டன் டி காக் இன்றைய ஆட்டத்திலும் ஆடுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது. கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக 38 பந்துகளில் 73 ரன்களை குவித்த மேயர்ஸ் தனது இடத்தை உறுதிப்படுத்தி உள்ளார். முதல் ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய வேக வீச்சாளர் மார்க் வுட் பிரமாதமான ஃபார்மில் உள்ளனர். சிஎஸ்கேவின் சுழற்பந்து வீச்சு vs லக்னௌவின் வேகப்பந்து வீச்சு என்ற ஆட்டம் மாறினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.
ருதுராஜே துணை!
ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங்கை சிஎஸ்கே அணி பெரிதாக நம்பியுள்ளது. சுழற்பந்து வீச்சை நன்றாக ஆடும் கான்வேவின் மீதும் எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் நடுவரிசை பேட்டிங் பலவீனமாக காணப்படுகிறது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ், அம்பதி ராயுடு பெரிதாக அணிக்கு கைகொடுக்கவில்லை. ஷிவம் துபே இடத்தில் லெக் ஸ்பின்னர் பிரஷாந்த் சோலங்கி சேர்க்கப்படவும் வாய்ப்பு உள்ளது. வேகப்பந்து வீச்சிலும் ஹங்கர்கர்கேகர் மட்டுமே நம்பிக்கை அளித்தார். லக்னௌ அணியின் முன்வரிசை பேட்டர்கள் நல்ல ஃபார்மில் உள்ளனர். ஆனால் சேப்பாக்கத்தில் அவர்களுக்கு சவால் காத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இம்பாக்ட் பிளேயர் யார்?
முதல் ஆட்டத்தில் கிருஷ்ணப்பா கௌதமை லக்னௌ அணி இம்பாக்ட் பிளேயராக பயன்படுத்தியது. இன்றைய ஆட்டத்திலும் அதற்கு வாய்ப்பிருக்கிறது. அமித் மிஸ்ரா அணியில் இடம்பிடிக்கும் பட்சத்தில் அவருக்குப் பதிலாக பதோனி இம்பாக்ட் பிளேயராக களமிறக்கப்படலாம். சென்னை அணி சுழற்பந்து வீச்சை சமாளிக்கும் பொருட்டு அம்பதி ராயுடுவை இம்பாக்ட் வீரராக பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது.வேகப்பந்து வீச்சைப் பலப்படுத்தும் விதமாக சிமர்ஜீத் சிங்கும் களமிறக்கப்படலாம்.
வாய்ப்புள்ள அணி
சிஎஸ்கே: ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா,பிரசாந்த் சோலங்கி, எம்.எஸ். தோனி (கேப், விக்), மிட்ச்செல் சாண்ட்னர், தீபக் சஹார், ராஜ்வர்தன் ஹர்கர்கேகர்.
எல்எஸ்ஜி: கே.எல். ராகுல் (கேப், விக்), கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, நிகோலஸ் பூரன், மார்கஸ் ஸ்டாய்னிஸ், குருனால் பாண்டியா, கிருஷ்ணப்பா கௌதம், ஆவேஷ் கான், ரவி பிஷ்னாய், அமித் மிஸ்ரா, மார்க் வுட்.
வியூகம் என்ன? கே.எல். ராகுல் இடக்கை சுழற்பந்து வீச்சுக்கு எதிராக சரளமாக ரன் குவிப்பவர் அல்ல. ஆகவே, ஜடேஜா-சாண்ட்னர் கூட்டணி அவருக்கு எதிராக மேட்ச் அப்பாக பிரயோகிக்கப்படலாம். அதே சமயம், ராகுல் சிஎஸ்கேவின் தீபக் சஹாருக்கு எதிராக 160 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கிறார்.
லக்னௌ அணியின் முன்வரிசை இடக்கை பேட்டர்களுக்கு எதிராக மொயீன் அலி களமிறக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. ஐபிஎல் கிரிக்கெட்டில் இடக்கை பேட்டர்களுக்கு எதிராக 6.79 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்துள்ளார் மொயீன் அலி.
ஆடுகளம் எப்படி? பந்து நன்றாக திரும்புவதற்கு வாய்ப்புள்ளது. சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் 18 விக்கெட்டுகளில் 11 விக்கெட்டுகளை சுழற்பந்து வீச்சாளர்கள் கைப்பற்றினர். சுழற்பந்து வீச்சின் சொர்க்கபுரியில் சென்னையை எப்படி எதிர்கொள்ளப் போகிறது லக்னௌ?
Source: ESPN Crickinfo