இங்கிலாந்து அதிரடி ஆட்டக்காரர் லியம் லிவிங்ஸ்டன் ஐபிஎல் 2023-இல் பஞ்சாப் கிங்ஸ் அணியின் முதல் ஆட்டத்தில் விளையாட மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
டிசம்பர் மாதம் முழங்காலில் ஏற்பட்ட காயத்திலிருந்து குணமடைந்து வரும் லிவிங்ஸ்டனுக்கு, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்னும் தடையில்லா சான்றிதழ் கொடுக்கவில்லை.
நடப்பு ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை ஏப்ரல் 1-ம் தேதி மொஹாலியில் எதிர்கொள்கிறது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு நடுவரிசையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய மிக முக்கியமான வீரர் லிவிங்ஸ்டன். பந்துவீச்சிலும் குறைந்தபட்சம் 2 ஓவர்களுக்காவது உதவுவார். முதல் ஆட்டத்தில் இவர் இல்லாதது அந்த அணிக்கு நிச்சயம் பின்னடைவை ஏற்படுத்தும்.
பாகிஸ்தானில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அறிமுகமான லிவிங்ஸ்டன், அந்தத் தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக இதுவரை எந்தவொரு போட்டிகளிலும் விளையாடவில்லை. கடந்தாண்டில், தி ஹண்ட்ரட் கிரிக்கெட் போட்டியில் அவருக்கு கணுக்காலிலும் காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
லிவிங்ஸ்டன் நிலை பற்றி, பிடிஐ செய்தி நிறுவனத்துக்குக் கிடைத்த தகவலின்படி, அவரது உடல்நிலை குறித்து அறிய, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அவருக்கு ஸ்கேன் செய்ய முடிவு செய்துள்ளது.
எனினும், ஏப்ரல் 5-ம் தேதி நடைபெறும் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் லிவிங்ஸ்டன் விளையாடுவார் எனத் தெரிகிறது.
ஜானி பேர்ஸ்டோ காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் சீசனிலிருந்து விலகியுள்ளார். தற்போதைய நிலவரப்படி, ஐபிஎல் வரலாற்றிலேயே ஏலத்தில் அதிக தொகைக்கு எடுக்கப்பட்ட சாம் கரண் மட்டுமே இங்கிலாந்திலிருந்து பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் இணைந்துள்ளார்.
லிவிங்ஸ்டன் தவிர்த்து ககிசோ ரபாடாவும் பஞ்சாப் கிங்ஸின் முதல் ஆட்டத்தில் விளையாடப்போவதில்லை. ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்துக்கு இருதினங்களுக்கு முன்பு அவர் பஞ்சாப் அணியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஐபிஎல் சீசன் லிவிங்ஸ்டனுக்கு சிறப்பான ஒன்று. 14 ஆட்டங்களில் 437 ரன்கள் எடுத்தார். ஸ்டிரைக் ரேட் 182.08. சராசரி 36.41. இதுதவிர பந்துவீச்சிலும் அவர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Source: ESPN Crickinfo